Villiampakkam Village

 

தனுர்பானபுரம்

(வில்லியம்பாக்கம் அக்ரஹாரம்)

ஸ்ரீமதே ஸ்ரீஅலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீனிவாச பரப்ரம்மனே நம:

ஸ்ரீமதே ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகாய நம:

 

ஸ்ரீவைஷ்ணவம் ஆழ்வார்களால் வளம் பெற்று, ஆசார்யர்களால் நன்கு பரவச் செய்யப்பட்டது. ஆழ்வார்களுக்குப் பிறகு ஸ்ரீமந்நாதமுனிகள் தொட்டு மீண்டும் புத்துயிர் பெற்ற நம் சம்ப்ரதாயம், ஸ்ரீமத் பாஷ்யகாரரின் காலத்தில் சிகரத்தை எட்டியது. திரும்பிய பக்கமெல்லாம் ஸ்ரீமன் நாராயணனின் நாமம் ஒலித்தது. ஸ்ரீவைஷ்ணவர்கள் திரண்டனர். இது தென்னாட்டில் மட்டுமல்ல, மேல் நாட்டிலும், வடநாட்டிலும் கூட. ஸ்ரீமத் ராமானுஜரின் கைங்கர்யத்தால் சம்ப்ரதாயம் மட்டும் செழிப்படயவில்லை, ஆலயங்களும் செழிப்பைய்ம் மாண்பையும் அடைந்தன.  

திருவரங்கம் முதல் திருவேங்கடம், யாதவாத்ரி வரை ஸ்ரீமத் ராமானுஜரின் சீரிய வழிகாட்டலில் எம்பெருமான் அர்ச்சையில் உபய வேதங்களையும் திருச் செவி சாய்த்து ஆனந்தத்தை அடைந்தான். உத்சவாதிகளைக் கண்டருளி பக்தர்களையும் ஆனந்தப் படுத்தினான்.

ஸ்ரீமத் ராமானுஜரின் காலத்தில் பல ஸ்ரீவைஷ்ணவ குடும்பங்கள் ஸ்ரீரங்கம், திருவேங்கடம், மேல்கோட்டை முதலான திவ்ய தேசங்களில் மிக ஆனந்தமாக அர்ச்சையில் எம்பெருமானுக்கு பல வித கைங்கர்யங்களைச் செய்து கொண்டு எம்பெருமானார் இட்ட கட்டளைகளைப் பின் தொடர்ந்தும், அவரது கிரந்தங்களை கற்றும் கற்பித்தும் சுகமாக வாழ்ந்து வந்தனர்.

அவ்வாறு வாழ்ந்து வந்தவர்களில் 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் நல்லான் சக்கரவர்த்தி என்கிற ஸ்ரீவரதாச்சாரியார் எனும் ஆசார்யபுருஷர். இவர் ஸ்ரீமத் ராமானுஜரின் சமகாலத்தவர். இவரது குலத் தோன்றல்களே ஸ்ரீவத்ஸ கோத்ரத்தைச் சேர்ந்த இன்றைய நல்லான் சக்கரவர்த்தி என்பவர்கள்.

இவரது வழித் தோன்றல்கள் திருமலையில் இருந்து கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிவாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.     

ஒரு கால விசேஷத்தில் இவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து மேலும் தெற்க்கே சென்றனர் என்று நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தார் சரிதம் உரைக்கின்றது. இதில் நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தினர் பெரும் குடும்பமாக இருந்துள்ளனர் என்று தெரிகின்றது. அவர்கள் பல பிரிவுகளாக பிரிந்து பல திவ்ய தேசங்களிலும், கிராமங்களிலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் முதலிய மாநிலங்களில் குடியேறினர் என்று அறிய வருகின்றது.

சிலர் புதிய ச்ரோத்ரிய கிராமங்களை உருவாக்கி உள்ளனர். இவ்வாறு நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தார்கள் குடியேறிய அல்லது உருவாக்கிய ஊர்கள் வருமாறு – புண்டரீகபுரம், திருநாராயணபுரம், நரசிம்மபுரம், ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், காஞ்சிபுரம், கங்காதரபுரம், வில்லியம்பாக்கம், கேதண்டிபட்டி, பாப்பாரப்பட்டி, கொத்திமங்கலம், இளங்காடு மற்றும் ஆந்திராவில் மற்றும் கர்நாடகாவில் பல பகுதிகளில் குடியேறினர்.

विल्लिंपाक्कग्रामोऽयं क्षीरनद्यास्तटे स्थित: |

श्रीनिवासदयापूर्ण: राजते सत्यमण्डले ||

வில்லியம்பாக்க க்ராமோயம்  க்ஷீரநத்யாஸ் தடே ஸ்தித: |

ஸ்ரீநிவாசதயா பூர்ண: ராஜதே சத்யமண்டலே ||

பொருள்: க்ஷீரநதி எனும் பாலாற்றங்கரையில் உள்ளது, எம்பெருமான் ஸ்ரீனிவாசனின் கருணை நிறைந்த வில்லியம்பாக்கம் எனும் இந்த கிராமம், சத்யவ்ரதம் எனும் காஞ்சி மண்டலத்தில் சிறந்து விளங்குகின்றது.

க்ஷீரநதி எனும் பாலாற்றங்கரையில் பல பல ஆக்ரஹாரங்கள் நிறைந்துள்ளன. இதில் பல பல மஹான்கள், பண்டிதர்கள் தோன்றி நம் சம்பிரதாயத்திற்கு பெருமை சேர்த்தனர். இவ்வாறு பாலாற்றங்கரையில் குடி பெயர்ந்தவர்களில் சுமார் நானூறு வருடங்களுக்கு முன் ஸ்ரீராகவார்யர் எனும் மகாநீயர் “வில்லியம்பாக்கம்” எனும் ஆக்ரஹாரத்தை ஸ்தாபித்தார்.

धनुर्बाणपुराख्योऽयं विद्वद्जनसमन्वित: |

राघवार्यकराब्जेन ग्रामोऽयं सुप्रतिष्ठित: ||

தனுர்பானபுராக்யோsயம் வித்வத்ஜனசமன்வித: |

ராகவார்யகராப்ஜேன க்ராமோsயம் சுப்ரதிஷ்டித: ||

பொருள்: தனுர்பானபுரம் எனும் இந்த கிராமம் வித்வான்கள் நிரம்பிய கிராமமாகும். இந்த ஸ்ரீகிராமம் ஸ்ரீராகவார்ய மகாதேசிகனின் திருக்கரத்தால் ஸ்தாபிக்கப் பட்டதாகும்.  

இந்த கிராமம் பாலாற்றங்கரையிலே செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மார்க்கத்தில் பழையசீவரம் எனும் ஸ்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றிலும் செட்டிபுண்யம், சிங்கபெருமாள் கோவில், சாஸ்திரம் பாக்கம், பழையசீவரம், திருமுக்கூடல், வடக்குப்பட்டு, மேற்கே பாலாறு அதை கடந்தால் அரும்புலியூர், மையூர், சாலவாக்கம், மாகரல் முதலிய முக்கியமான அக்ரஹாரங்கள் உள்ளன. இதில் திருமுக்கூடல் என்பது பலர் அறியாத பிரதேசமாகும்.

திருமுக்கூடல் என்பது திருவேணி சங்கமம் ஆகும். வடநாட்டில் திரிவேணி சங்கமமோ அதுபோல இங்கேயும் ஒரு சங்கமம். பாலாறு, வேகவதி எனும் சரஸ்வதி நதி, மற்றும் செய்யாறு ஒன்று கலந்து சங்கமமாகும் இடம் திருமுக்கூடல். இது பாலாற்றின் தெற்குக் கரையில் உள்ளது. வடக்குக் கரையில் திருமுக்கூடல். இந்த சங்கமத்தில் நீராடுவது சகல க்ஷேமங்களையும் கொடுக்கும்.

இவ்வாறு மிக உயர்ந்த க்ஷேத்திரத்தின் அருகில் ஸ்ரீராகவார்ய மஹாதேசிகன் வில்லியம்பாக்கம் (வில்+அம்பு பாக்கம்) எனும் ச்ரோத்ரிய ஆக்ரஹாரத்தை நிர்மாணித்தார். இது சாஸ்திரம்பாக்கம் எனும் இரட்டை கிராமமாக உள்ளது.

பையனூர், வில்லியம்பாக்கம், திருவீதிப்பள்ளம், கொண்டங்கி மற்றுமொரு கிராமம் என்று ஐந்து கிராமங்களை நிர்மாணித்தார் ஸ்ரீராகவார்ய மஹாதேசிகன் என்று பெரியோர் கூறுவர். இந்த கிராமத்தில் ஸ்ரீராகவார்ய மஹாதேசிகனின் சந்ததியினர் சகல சாஸ்திரங்களையும் பயின்று, ராமாநுஜார்ய திவ்யாஞ்யா வர்ததாம் அபிவர்ததாம் என்று சம்பிரதாய ப்ரவர்தகளை செய்து கொண்டு, விவசாயத்தையும் கவனித்துக் கொண்டு வசித்து வருகின்றனர்.

भद्रमासे भाद्रपदे पुनर्वसुयुतेsहनि |

जाताय कुलनाथाय राघवार्याय मङ्गलम् ||

பத்ரமாஸே பாத்ரபதே  புனர்வசுயுதேsஹனி |

ஜாதாய குலனாதாய ராகவார்யாய மங்களம் ||

பொருள்: மங்களகரமான புரட்டாசி மாதத்தில் புனர்வசு நக்ஷத்ரம் கூடிய நன்னாளில் அவதாரம் செய்த எங்களின் கூடஸ்தரான ஸ்ரீராகவார்ய மகாதேசிகனுக்கு மங்களம்.

ஸ்ரீராகவார்ய மகாதேசிகனுக்கு அவதார தினம் புரட்டாசி மாதம் புனர்வசு நக்ஷத்ரம்.

இவருடைய குமாரத்தியை காஞ்சிபுரம் தாதவம்சத்தைச் சேர்ந்த ஓர் மஹநீயருக்கு விவாஹம் செய்வித்து, அவருக்கு இங்கேயே நிலபுலன்களை கொடுத்து கிராமத்திலேயே வசித்து வரும்படி சாதித்தாயிற்று என்பர். இவர்களை வில்லியம்பாக்கம் தாதாசார்யர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இன்று வரை இரு வம்சத்தாருக்கும் இடைய விவாஹ சம்பந்தம் நடைபெற்று வருகிறது. வில்லியம்பாக்கம் ஸ்வாமி என்று மிகவும் சுப்ரசித்தராய் எழுந்தருளி இருந்த மஹான் காஞ்சிபுரம் தாதாசார்யர் வம்சத்தை சேர்ந்தவர். வில்லியம்பாக்கம் ஸ்ரீவத்ஸவம்சத்தினரின் தௌஹித்ரர்  ஆவார்.  இவர் சகல சாஸ்திர பாரங்கதராய், விரக்தராய் இருந்து கொண்டு ஸ்ரீபாஷ்யாதி கிரந்தகாலக்ஷேபாதிகளை சாதித்துக் கொண்டு சிறந்த ஆசார்யபுருஷராய் வாழ்ந்து வந்தார்.

மேலும் அடியோங்களுடைய ப்ரபிதாமஹர் ஸ்ரீ உ.வே. வேங்கடவராஹர், பெரிய பிதாமஹர் ஸ்ரீ. உ.வே. அனந்தாச்சாரியார், ஸ்ரீ.உ.வே. ரங்கநாதாச்சாரியார் (பிச்சுமணி மற்றும் கல்யாணம் அவர்களின் பாட்டனார்), ஸ்ரீ. உ.வே. ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் (சீமா ஸ்வாமி), ஸ்ரீ. உவே. சக்ரவர்த்தி ஸ்வாமியின் தகப்பனார் போன்றோர் மிகவும் பிரசித்தர்களாக எழுந்தருளி இருந்தார்கள்.

இப்போதும் காஞ்சியில் வசிக்கும் மஹான், வித்வான் வில்லியம்பாக்கம் ஸ்ரீ.உவே. ஸ்ரீநிவாசாச்சாரியார் ஸ்வாமி ஆசார்யபுருஷராக சுப்ரசித்தராக எழுந்தருளி உள்ளார். அடியேன் தமையனார்கள் வித்வான் ஸ்ரீ.உவே. வரதராஜாச்சாரியார் மற்றும் வித்வான் ஸ்ரீ. உவே. ரங்கராஜாச்சாரியார் இருவரும் வேதாத்யயணம் செய்து ஸ்ரீபாஷ்யகாலக்ஷேப அதிகாரிகளாகவும் ஆசார்ய புருஷர்களாகவும் விளங்குகின்றனர்.

அடுத்த இளம்தலைமுறையினரில் ஸ்ரீ.உ.வே. சுந்தரவரதாச்சாரியார் யஜுர் வேதம் மற்றும் திராவிட வேத அதிகாரியாக விளங்குகிறார்.  அடியேன் தமையனார் ஸ்ரீ உ.வே.வரதராஜாச்சாரியாரின் குமாரன் ஸ்ரீ.உ.வே. ராகவன் எனும் ஸ்ரீ.சார்ங்கராஜாச்சாரியார் யஜுர் வேத கனபாடியாகவும், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேப அதிகாரியாகவும் விளங்குகிறார்.

ஹைதராபாத்தில் நமது குடும்பத்தை சேர்ந்தவர் “ஸ்ரீதர் குருஜி” என்று சுப்ரசித்தராக விளங்குகிறார்.

அது போல திருவஹீந்திரபுரத்தில் எழுந்தருளி இருக்கும் அயிந்தை நாதனுக்கு திவ்யபிரபந்த கைங்கர்யம் செய்து கொண்டு இருந்து வந்தவர் நமது குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீ உவே. முரளி ஸ்வாமி.  இப்படி ஆங்கங்கே பிரசித்தர்களாக எழுந்தருளி இருந்து வருகிறார்கள் நமது வம்சத்தார்.

வில்லியம்பாக்கம் ஸ்ரீராகவார்ய மகாதேசிகனின் வம்சத்தவர்களுக்கு வில்லியம்பாக்கம் ஸ்ரீநிவாசன் சந்நிதி, ஆத்தூர் பெருமாள் கோவில், செங்கல்பட்டு ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் சந்நிதி, புரசைவாக்கம் ஸ்ரீநிவாசன் சந்நிதிகளில் முதல் தீர்த்த மரியாதைகள் கிடைத்து வருகிறது. இன்றும் வில்லியம்பாக்க ஸ்ரீஅக்ரஹாரத்தை சேர்ந்தவர்கள் இன்றும் வேதாத்யயணம் செய்து ஸ்ரீபாஷ்யகாலக்ஷேபம் செய்து கொண்டு எம்பெருமானாரின் கட்டளைகளை நிர்வஹித்துக் கொண்டு வருகிறார்கள்.

धनुर्बाणपुराधीश:  श्रीलक्ष्मीसहितेश्वर: |

अपारकरुणापूर्ण:  शैलं हित्वा इहागत: ||

தனுர்பானபுராதீச:  ஸ்ரீலக்ஷ்மீசஹிதேஸ்வர: |

அபாரகருணாபூர்ண:  சைலம் ஹித்வா இஹாகத: ||

பொருள்: தனுர்பானபுரம் எனும் இந்த வில்லியம்பாக்க கிராமத்தின் நாதன், லக்ஷ்மியுடன் கூடியவன், அளவற்ற கருணை நிரம்பியவன் திருமலையையும் விட்டு இங்கே வந்து கோவில் கொண்டுள்ளான்.

வில்லியம்பாக்க ஸ்ரீகிராமத்தில் ஸ்ரீநிவாசன் கோவில் கொண்டுள்ளான். உத்சவர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சஹிதராய், பட்டாபிஷேக ராமன், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார், ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகன் ஆகியோர் அனைவரையும் அனுக்ரகம் செய்கிறார்கள்.  ஹனுமான் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இந்த க்ஷேத்ரத்தில் தீபஸ்தம்பம் சிறந்து விளங்குகிறது.

மாதாமாதம் விஷேமாக உத்சவாதிகளை இந்த கிராமத்தின் புத்ரர்களும், தௌஹித்ரர்களும் மிகவும் சிரத்தையுடன் செய்து வருகின்றனர்.

முக்கியமாக பவித்ரோத்சவம், ஸ்வாமி தேசிகன் சாற்றுமுறை, பிரம்மோத்சவம், ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரம், ஸ்ரீஜயந்தி, சித்ராபருவம் முதலான உத்சவங்கள் நடைபெறுகின்றன. சித்ரா பவுர்ணமியன்று பெருமாள் மாந்தோப்பு மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

சமீபத்தில் இந்த சன்னதியில் புனருத்தாரண கைங்கர்யங்கள் செய்யப்பட்டு பலவித கைங்கர்யங்கள் நடைபெற்றன. இந்த அக்ரஹாரத்தின் புத்ரர்களும், தௌஹித்ரர்களும் சேர்ந்து இந்த கைங்கர்யங்களை செய்ய எம்பெருமான் சங்கல்பித்தான் போலும். அனைவரும் சேர்ந்து புதியதாக ஐந்து நிலைகளை கொண்ட வானளாவிய கம்பீரமான ராஜகோபுரத்தை நிர்மாணித்தனர். புதியதாக த்வஜஸ்தம்பமும் ஸ்தாபிக்கப்பட்டு எம்பெருமானுக்கு அனைத்து வாகனங்களும் திருத்தேரும் புதியதாக செய்யப்பட்டன. எம்பெருமான் ஸ்ரீநிவாசன் பிரம்மோத்சவம் கண்டருள திருவுள்ளம் கொண்டான் போலும். ஆனி மாதம் சிரவண நக்ஷத்திரத்தில் பிரமோத்சவம் கண்டருளுகிறான் மங்காநாயகன்.

இது தவிர ஒரு முறை 1936ம் வருடம் திருத்தண்கா எம்பெருமான் தீபப்ரகாசர் இங்கே எழுந்தருளி ஆராதிக்கப்பட்டார் என்று தெரிய வருகிறது. அவ்வண்ணமே செங்கல்பட்டில் உள்ள ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளினார் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

श्रीवेङ्कटाद्रिनाथाय  अस्मत्कुलविभूतये |

लक्ष्मीसहितनाथाय  श्रीनिवासाय मङ्गलम् ||

ஸ்ரீவேங்கடாத்ரி நாதாய அஸ்மத் குல விபூதயே |

லக்ஷ்மீசஹிதநாதாய  ஸ்ரீநிவாசாய மங்களம் ||  

பொருள்: திருவேங்கடமலையின் நாதனும், எங்கள் குலத்தின் சொத்தும், மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீநிவாசனுக்கு மங்களம்.

இந்த அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசனை சேவிக்க அனைத்து ஆஸ்திகர்களையும் அடியேன் தண்டனிட்டு பிரார்த்திக்கறேன்.

பி.கு.: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்கள் அடியேனுடைய சிறுமதியில் எட்டியவாறு இயற்றப்பட்டனவாம். இந்த கட்டுரையில் மற்றும் ஸ்லோகங்களில் சொற்குற்றம், பொருட்குற்றம், குறைகள் இருப்பின் திருத்திப் பணி கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

தாசன்

வில்லியம்பாக்கம் கோவிந்தராஜன்.

 

Comments

Popular posts from this blog

Sanskhepa Ramayanam with Tamil Translation

Madhurantakam Swami

Sanskrit Lessons by Dr V C Govindarajan